Thursday, 13 February 2014

விளா





விளா மரத்தில் காய்கள்.
விளா.

மூலிகையின் பெயர்  :- விளா.

தாவரப்பெயர் :- FERONIA ELEPHANTUM.

தாவரக்குடும்பம் :- RUTACEAE.

வகைகள் :- தரையோடு ஒட்டிப் படரக்கூடியது நில விளா என்றும், சிறிய மரமாக வளரும் இயல்புடையதை சித்தி விளா என்றும், இங்கு விளக்குவது பெரிய மர வகுப்பைச் சார்ந்த பெருவிளா மரம்.

வேறு பெயர்கள் :– கடிபகை, கபித்தம், பித்தம், கவித்தம், விளவு, தந்தசடம், வெள்ளி போன்றவை.

இராசன்-சின்னாம்பதி.
பயன் தரும் பாகங்கள் :– கொழுந்து, இலை, காய், பட்டை, ஓடு மற்றும் பிசின். ஆகியவை.

வளரியல்பு :– விளாமரம் தாயகம் இந்தியா பின் பாக்கீஸ்தான், இலங்கை,தாய்வான், மாயின்மருக்குப்பரவிற்று. இது எங்கும் வளரும். மர வகுப்பைச் சார்ந்தது. இது காடுகளில் அதிகம் காணப்படும். கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டருக்கு மேல் வளராது. ஆழமான மண்வகையில் நன்கு வளரும். மேலும் வீடுகளிலும், கோயில்களிலும், தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது.  மூன்று வகைகளில் இது பெரிய மர வகுப்பைச் சார்ந்து பெரு விளா மரம். இந்த   கருமைநிறமாக  இருப்பதால் கருவிளாம் என்று சொல்லப்படுகிறது. விளாமரம் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் கூட்டிலைகள்.   இலைகள் 5-7 வரை இருக்கும், இது 25-35 மில்லி இருக்கும். தனி இலை 10 மில்லி 20 மில்லி அகலம் இருக்கும். இதன் இலைகள் நல்ல மணத்தைக் கொண்டது. இலை நீள் வட்ட வடிவமாக இருக்கும். இதன் காய்கள் பார்ப்பதற்கு வில்வக்காயைப் போன்று உருண்டையாக இருக்கும். இதன் விட்டம் 5-9 செ.மீ. இருக்கும். பழத்தின் ஓடு கெட்டியாக இருக்கும். உள் சதைமரக்கலரில் இருக்கும். விதைகள் வெள்ளையாக இருக்கும். காயாக இருக்கும் போது அதன் சதை துவர்ப்பாக இருக்கும். பழுத்தால் துவர்ப்பும் புளிப்பும் கலந்த சுவையாக இருக்கும். இது முள்ளுள்ள உறுதியான பெரிய மரம். விளாமரம் வளர்ந்த 5 வது வருடத்தில் காய் காய்க்கும்.  இதை எந்த பூச்சியும் தாக்காது. விளா ஓடு கைவினைப் பொருள்கள் செய்யப் பயன் படுத்துகிறார்கள். விளா விதைகளின் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. மொட்டுக் கட்டுதல் மற்றும் ஒட்டுக் கட்டுதல் மூலமும் இனவிருத்தி செய்யப்படுகிறது.

விசாக நட்சத்திரத்தின் விருட்ச மரம் விளா. விசாக நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுக்களால் குழந்தை பாக்கியமின்மை, பிறக்கின்ற குழந்தை ஊனமாகப்பிறத்தல், வாயுத்தொல்லைகள், நோய்த்தொற்று, இருமல், ஆஸ்துமா, அலர்ஜி, சர்கரை நோய், மனப்பதற்றம், ஈறு மற்றும்
கர்பப்பைக் கோளாருகள் ஆகியவை உண்டாகின்றன. இதனை விசாக நட்சத்திர தோசம் என்பர். விளாமரத்தின் நிழலில் இளைப்பாறினால் இந்த தோசத்திலிருந்து விடுபடலாம்.

மருத்துவப் பயன்கள் :– விளா சதை நரம்புகளைச் சுருங்கச் செய்வது இதன் பொது குணமாகும். பழம் கோழையகற்றிப் பசியுண்டாக்கும். பழ ஓடு தாதுக்களின் கொதிப்பைத் தணிக்கும். பிசின் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத்துவளச் செய்யும். துவர்ப்புச் சுவையோடு வயிற்றில் இருக்கின்ற வாயுவினை அகற்றி, உடலுக்குக் கிளிர்ச்சியைத் தந்து, புண்களை ஆற்றக் கூடிய செய்கை உடையது. நாவறட்சி, விக்கல், வாதம், பித்தம், மற்றும் குட்டம் போக்க வல்லது.

விளாக் கொழுந்து புன்னைக் காயளவு அரைத்துப் பால், கற்கண்டு கலந்து சாப்பிடப் பசியின்மை, கப இருமல், கபக்காசம், இளைப்பு,  பித்தக்கணச்சூடு தீரும்.

இலைக் குடிநீர் பித்த சுரம், இருமல், தேக வறட்சி தணிக்கும்.

இதன் பழம் துவர்ப்பும், புளிப்பும் உடையது. நறுமணமுடையது. சாப்பிட சுவையாக இருக்கும். சர்கரை சேர்த்துப் பிசைந்து சாப்பிட அமிழ்தம் போலிருக்கும். பழம் பசியைத் தூண்டும், குருதியை உண்டாக்கும், வாந்தியை நிறுத்தும். மலத்தைக் கட்டும். குடலுக்கும் உடலுக்கும் பலத்தைக் கொடுக்கும். விந்தை உற்பத்தி செய்யும். பித்தக் கோளாறுகள் யாவும் நீங்கும்.

விளாம்பழத்தைச் சுட்டு அதன் சதையை எடுத்து மிளகாய், வெங்காயம், உப்பு, கொத்தமல்லி, துவரம்பருப்பு வறுத்து சேர்த்துத் துவையல் அரைத்து உணவில் சாப்பிடலாம். சுவையாக இருக்கும். பித்தம் தணிக்கும், பித்தத்தினால் வரும் தலை சுற்று நீங்கும்.

இதன் தளிரிலையை அரைத்து 10 கிராம் மோரில் மூன்று வேளை சாப்பிட வயிற்றோட்டம் நிற்கும். மூன்று நாள் இரு வேளையும் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

விளாந்தளிர், நாரத்தையின் தளிர், கருவேப்பிலை, எலுமிச்சையின் இலை, சம அளவு உலர்த்திய பொடி 100 கிராம், மிளகு 10 கிராம், வெந்தயம் 10 கிராம் கடலைப் பருப்பு வறுத்து பொடி 100 கிராம்  உப்பு 20 கிராம், சேர்த்துக் கலந்து பொடி உணவில், சேர்த்துப் சாப்பிட பித்தம் குணமாகும், பசி எடுக்கும், வாந்தி குணமாகும். உடலுக்கும் ஊட்டமுடையதாகும்.

குட்டி விளாம் என்பது நிலத்தில் படர்ந்துள்ள குத்துச் செடியாகும். விளாமரத்தின் இலை இருக்கும். இது பூக்காது. காய்க்காது. ஆனாலும் இதன் இலை மருத்துவக்  . சிறு குழந்தைகளுக்கு வயிற்றோட்டம், வாந்திக்கு அரைத்து வெந்நீரில் கொடுக்கலாம். சளிக்கு துளசியுடன் சேர்த்துச் சாறு பிழிந்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு வரும் வெப்பக் கொப்புளங்களுக்கும், அரிப்பு, தடிப்புகளுக்கும் மஞ்சளுடன் சேர்த்து அரைத்துப் பூசலாம். குணமாகும்.  தோல் மென்மையாக இருக்கும். மிளகு ரசத்தில் இதன் இலையை கறிவேப்பிலையைப் போல் போட்டால் மணமாக இருக்கும்.

விளாங்காய் சதையை சிறிது வேக விட்டுக் கொடுக்கப் பேதி, சீதப் பேதி தீரும்.

பழத்தை ஓட்டுடன் அரைத்து விழுங்க மருந்து வீறு தணியும்.

விளாம் பிசின் உலர்த்தி தூள் செய்து காலை, மாலை 1 சிட்டிகை வெண்ணையுடன் கலந்து சாப்பிட வெள்ளை, நீர் எரிச்சல், மேக நோய், உள்உறுப்பு ரணம், அதிசாரம், பெரும்பாடு ஆகியவை தீரும். உப்பில்லாப் பத்தியம் தேவை.

இலை, பூ, பழம், பட்டை, வேர் ஆகியவற்றைச் சமனளவு உலர்த்திப் பொடித்து வேளைக்கு 5 கிராமாக சிறிது சர்கரையுடன் உண்டு வரப் பித்த மிகுதி, பசியின்மை, பேதி, சீதபேதி, உமிழ்நீர் மிகுதியாகச் சுரத்தல் ஆகியவை தீரும்.

விளாமரத்தின் காயைக் கொண்டு வந்து அதை முழு அளவில் ஒரு சட்டியில் போட்டு, காய் நனையும் அளவிற்குத் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாக வெந்த பின் இறக்கி உடைத்து உள்ளேயுள்ள சதையை மட்டும் எடுத்து, அத்துடன் அரை டம்ளர் அளவு தயிர் சேர்த்துக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் சீதபேதி, வயிற்றுப் போக்கு பூரணமாக குணமாகும்.

விளாங்காயை மேலே சொன்னபடி வேக வைத்து அதன் சதையுடன் உப்பு, புளி, கறிவேப்பிலை, கொத்துமல்லிக் கீரை சேர்த்து துவையல் அரைத்து சாதத்துடன் சேர்த்து தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்த சம்பந்தமான சகல கோளாறுகளும் நீங்கி விடும்.

விளாம் பழத்தின் ஓட்டை அம்மியில் வைத்து மைபோல அரைத்து, எலுமிச்சம்பழ அளவு எடுத்து காலையில் மட்டும் வாயில் போட்டு விழுங்கி வெந்நீர் குடிக்க வேண்டும். தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெண்ணாசை வெறுத்து விடும்.

ஒரு கைப்பிடி அளவு விளா இலை எடுத்து முறைப்படி குடிநீரிட்டு அருந்தி வர காச்சல், இருமல், தேக வறட்சி நீங்கும்.

வேர்க்குரு, கோடைக் கொப்புளங்கள் முதலிய வற்றிக்கு விளா இலைக் கொழுந்தை சாறு பிழிந்து பூசிவர குணமாகும்.

விளாங்காய் மற்றும் வில்வக்காய் இவைகளின் சதைப் பகுதியை எடுத்து அதை கஞ்சியாக க் காச்சிக் குடித்து வந்தால் மூல நோய் தொல்லை குறையும்.

விளாம்பழத்தின் ஓட்டைப் பிளந்து பழத்தை மட்டும் உட்கொண்டு வர வாய் நீர் ஊறல் வாய்ப்புண், ஈறு சம்பந்தமான நோய்களும் நீங்கி, நன்கு பசி உண்டாகும்.

விளாம்பழச் சதையுடன் தேன், திப்பிலி சூரணம் தேவையான அளவு கலந்து உண்ண விக்கல், மேல் மூச்சு வாங்கல் நிற்கும்.

விளாமரப்பட்டை 488 கிராம் எடுத்துக் கொண்டு நன்கு இடித்து, 500 மிலி நீர் விட்டு நன்கு காச்சி, தினம் இரு வேளை அருந்தி வர பித்த வாந்தி, குமட்டல், புகையிலை நஞெசு நீங்கும்.

நீரழிவு நோய்க்கு ஆவாரை வேர், விளா வேர், பூலாவேர், இலவங்கம், காட்டு மல்லி வேர் இவற்றை சம அளவு எடுத்து, எருமை மோரில் இட்டு நன்கு வேக வைத்து, குறிப்பிட்ட அளவு தயிருடன் கலந்து அருந்தி வர குணம் தெரியும்.


விளாம் பிசின் ஒரு துண்டை வாயில் அடக்கி அதன் ரசத்தை மட்டும் விழ்ங்கி வந்தால் வறட்டிருமல் நீங்கும்.

நாட்பட்ட ரணங்களுக்கு விளாம் பிசினைக் கொண்டு செய்யப்படும் பூச்சு மருந்து பயன் படுகிறது.

சித்த மருத்துவத்தில் விளாம்பழத்தை பல மருந்துகள் செய்யப் பயன்படுத்திகிறார்கள்.

விளாம் பழத்தை யானை விழுங்கிய பின் அந்த ஓடு அதன் கழிவு வெளியே வரும்போது எடுத்து உடைத்துப் பார்த்தால் உள்ளே சாம்பலாக மாறியுள்ளது என்று சின்னாம்பதி இராசன் என்பவர் அனுபவத்தில் கூறினார். படங்கள் அங்கு எடுத்தது தான்.
விளாகாய் உடைத்தது.

விளாம்பழம் உடைத்து.

விளாமரம்.

விளாம்பழம்.

No comments:

Post a Comment