Thursday, 13 February 2014

வாதநாராயணன்





1. மூலிகையின் பெயர் -: வாதநாராயணன்.

2. தாவரப் பெயர் -:DELONIX ELATA.
3. தாவரக்குடும்பம்-: CAESAL PINIOIDEAE.
4. வேறு பெயர்கள் -: வாதரக்காட்சி, ஆதிநாராயணன், வாதரசு, தழுதாழை வாதமடக்கி எனவும் ஆங்கிலத்தில் TIGER BEAM, WHITE GULMOHUR என்றும் அழைப்பர்.

5. பயன் தரும் பாகங்கள் -: இலை, பட்டை, வேர், சேகு மரம் ஆகியவை.

6. வளரியல்பு -: வாதநாராயணன் தாயகம் காங்கோ, எகிப்து, கென்யா, சூடன், உகண்டா, எத்தோபியா, போன்ற நாடுகள். பின் இந்தியா, ஸ்ரீலங்கா, பாக்கீஸ்தான், சாம்பியா ஆகிய நாடுகளிக்குப் பரவியது. மரவகையைச் சேர்ந்தது. செம்மண்ணில் நன்கு வளரும். ஆற்றங்கறைகளில் அதிகம் காணப்படும். இது பத்தடி முதல் 45 அடி வரை வளரக்கூடியது. தமிழகமெங்கும் வளரக்கூடியது. வெப்ப நாடுகளில் ஏராளமாகப் பயிராகும். வீடுகளிலும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் இதனை வளர்ப்பார்கள். இதன் இலை பார்பதற்கு புளியிலைகளைப் போன்று சிறிதாக இருக்கும். கால்நடைகளுக்கு நல்ல தீவனம். இரு சிறகான சிறு இலைகளையுடைய கூட்டிலை 10-14 ஜதைகளாகவும் உச்சுயில் பகட்டான பெரிய பூக்களையும் தட்டையான காய்களையும் உடைய வெளிர் மஞ்சள் சிவப்பு நிறமுடைய மரம். பூக்கள் பூத்துக்கொண்டே இருக்கும். மே, ஜூன் மாதங்களில் காய்கள் விடும். இது விதை மூலமும், கட்டிங் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதைகளை விதைக்கும் மூன்பு 24 மணி நேரம் ஊரவைக்க வேண்டும்.

7. மருத்துவப் பயன்கள் -: வாதயாராயணன் பித்த நீர் பெருக்குதல், நாடி நடையை மிகுத்து உடல் வெப்பம் தருதல், உடலில் இருக்கிற வாதம் அடக்கி மலத்தை வெளிப்படுத்தும். வாய்வைக் குறைக்கும். பித்தம் உண்டாக்கும். வீக்கம் கரைக்கும். குத்தல் குடைச்சல் குணமாகும். நாடி நரம்புகளைப் பலப்படுத்தும். ஆடாதொடை போல இழுப்பு சன்னியைக் குணமாக்கும். பல ஆண்டுகளான சேகு மரத்தை தண்ணீரில் ஊர வைத்து கெட்டியாக்கி தேக்கு மரம் போன்று உபயோகப்படுத்துவார்கள்.

இதன் இலையை எள் நெய்யில் வதக்கி, உளுந்துப் பருப்பு, பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி, மிளகாய், உப்பு, புளி சேர்த்து துவையல் அரைத்து வாரம் ஒருமுறை உணவில் சாப்பிட பேதியாகும். வாத நோய் தீரும்.

இலையை இடித்துப் பிழிந்த சாறு 500 மி.லி. சிற்றாமணக்கு நெய் 500 மி.லி. பூண்டு 100 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி வகைகு 30 கிராம், வெள்ளைக் கடுகு 20 கிராம் எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் காய்ச்சி, பதத்தில் வடித்து வைத்து, இதில் 5 -10 மில்லி உள்ளுக்குக் கொடுத்து வெந்நீர் அருந்த பேதியாகும். அனைத்து வாத நோய்களும் குணமாகும். மேல் பூச்சாக பூசலாம். கீல் வாதம், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி, கை கால் குடைச்சல், மூட்டு வீக்கம், இடுப்பு வலி, இளம்பிள்ளை வாதம், இழப்பு, சன்னி, மேகநோய் யாவும் குணமாகும். மலச்சிக்கல் முழுவதும் குணமாகும்.

சொறி சிரங்கிற்கு இதன் இலையுடன் குப்பைமேனி இலை, மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து மேலே தடவி, குளிர்ந்த நீரில் குளித்து வர அவை நீங்கும்.

மேக நோயால் அவதிப்படுபவர்கள் இதன் இலையை நன்கு உலர்த்திப் பொடி செய்து காலை, மாலை 1 கிராம் வீதம் வெந்நீருடன் கலந்து அருந்தி வர குணமாகும்.

இரத்த சீதபேதிக்கு வாதநாராயணன் வேரை அரைத்து எருமைத் தியிருடன் கலந்து அருந்த குணம் தெரியும்.

இலையைப் போட்டுக் கோதிக்க வைத்துக் குளிக்க உடம்பு வலி தீரும்.

நகச்சுத்தி, கடுமையான வலியுடன் நகக்கண்ணில் வீக்கம் வரும். இதற்கு பிற மருந்துகள் எதுவும் கேட்பதில்லை. இதன் தளிரை மைபோல் அரைத்து வெண்ணெயில் மத்தித்து வைத்துக் கட்ட இரு நாளில் குணமாகும். வலி உடனே நிற்கும்.

இதன் இலைச்சாறு 1 லிட்டர், மஞ்சள் கரிசலாங்கண்ணி, குப்பை மேனி, கறுப்பு வெற்றிலை இவற்றின் சாறு வகைக்குக் கால் லிட்டர் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெணெணெய வகைக்கு அரை லிட்டர், சுக்கு, மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம், சீரகம், மஞ்சள் வகைக்கு 20 கிராம் பொடித்து அரைத்து அரை லிட்டர் பசும் பாலுடன் கலக்கிப் பதமாகக் காய்ச்சி 21 வெள்ளெருக்கம் பூ நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி மேற்பூசாகத் தடவிப் பிடித்து விடப் பக்க வாதம், பாரிச வாயு, நரம்பு இழப்பு முக இசிவு, முகவாதம், கண், வாய், நாக்கு, உதடு, இழப்பு ஆகியவை தீரும்.

வாத நோய் எண்பது என்கின்றனர். இதன் இலை, பட்டை, வேர்பட்டை ஆகியன சூரணமாகவோ, குடி நீராகவோ, தைலமாகவோ சாப்பிட எல்லா வகையான வாதமும் தீரும்.

இதன் இலையின் சூரணத்தை 500 கிராம் அளவு வெந்நீரில் கலந்து குடிநீராக குடிக்க வாய்வுத் தொல்லை, வயிற்று வலி குணமாகும்.

“சேர்ந்த சொறி சிரங்கு, சேர்வாதம் எண்பதும் போம்
ஆர்ந்தெழுமாம் பித்தம் அதிகரித்த மாந்தமறும்-
ஐய்யின் சுரந்தணியும், ஆனதழுதாழைக்கே
மெய்யின் கடுப்பும் போம்விள்” -------குருமுனி.


-----------------------------------(மூலிகை தொடரும்)




No comments:

Post a Comment